புகழ்வதற்கு அதிகத் தகுதி உடையவர்?
உறவினர் இல்லத் திருமண விழா ஒன்றில் சிலர் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். பேச்சு தவ்ஹீதின் பக்கம் சென்றது. பொதுவாகவே ஏகத்துவக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் உயரிய எண்ணத்தில், எப்போது வாய்ப்பு கிடைக்கும் ஏகத்துவக் கொள்கையை எல்லோருக்கும் எடுத்தியம்புவோம் எனக் காத்திருப்பார்கள் அல்லவா? அவ்வகையில் இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.
எங்கள் உறவினர் மத்தியில் நற்குணத்திலும் நல்லொழுக்கத்திலும் மிகவும் நற்பெயர் பெற்ற எனது நெருங்கிய உறவினர் தமது நண்பர் ஒருவரிடம் என்னைப் பற்றி புகழ்ந்து அறிமுகம் செய்து செய்துக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயங்களைச் சொல்லி இறுதியில் 'ஆனால் இவர் நஜாத்' என்று முடித்தார். என்னைப்பற்றி உயர்வாகச் சொன்ன அனைத்துக்கும் நான் தகுதியானவனா? என்பது எனக்குத் தெரியாது, ஆனால் என்னை (இவர்கள் மொழியில் நஜாத் நமது மொழியில்) தவ்ஹீத் என்று அறிமுகம் செய்தது மட்டும் எனக்குப் பெருமையாக இருந்தது. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை தவ்ஹீத் என்று சொல்வதில் தான் பெருமை அடைய முடியும் அல்லவா!
பேச்சு களைகட்டத் தொடங்கியது. எனது உறவினராகிய அவர் தொடர்ந்தார். தனது மைத்துனர் துபாயில் ஒரு பெரிய ஷெய்கிடம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? எனக் கேட்டாராம், அதற்கு அந்த ஷெய்க் 'நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு யாரைப் புகழ்வது?' என பதில் சொன்னாராம். அதற்கு இவர் எங்கள் தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழக்கூடாது' எனச் சொல்கிறார்கள் என்று சொன்னாராம்.
இப்படி ஒரு செய்தியைச் சொன்ன இவரும், துபாயில் ஷெய்கிடம் பத்வா கேட்ட இவர் மைத்துனரும் பாமரர்களல்ல. நன்றாகப் படித்தவர்கள், நாலும் தெரிந்தவர்கள், வணக்க வழிபாடுகளில் பேணுதலானவர்கள், இறையச்சம் உடையவர்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இவர்கள் கூட இன்னும் தவ்ஹீத் என்றால் என்ன வென்று புரிந்துக் கொள்ளவில்லையே! அப்படியிருக்க பாமர மக்களை நாம் குறைபட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை.
எனக்கு ஒரு உதாரணம் சொல்லத் தோன்றுகிறது. 'குழந்தைக்கு பால் கொடுக்கலாமா என்று பண்டிதர் அல்ல பாமரரிடம் கேட்டாலும் 'பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுப்பது?' என்று தான் பதில் சொல்வர். கையில் வைத்திருக்கும் பாலைக் காண்பித்து 'இந்தப் பாலை குழந்தைக்கு கொடுக்கலாமா?' எனக் கேட்டால் அந்தப் பாலை பரிசோதனை செய்து நல்ல பால் தானா அல்லது கெட்டுப் போனதா? பசும் பாலா, கள்ளிப்பாலா, விஷம் கலந்த பாலா நல்ல பாலா என்பதை யெல்லாம் உறுதி செய்த பின்னர் தானே இந்தப் பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா கூடாதா என முடிவு செய்ய இயலும்.
அது போல நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? என்று அவர் கேட்டதை விட, எங்கள் தமிழ் நாட்டில் ரபீவுல் அவ்வல் மாதம் 12 நாளும் பள்ளிவாசலிலும் வீடுகளிலும் சுப்ஹான மௌலிது என்று ஓதுகிறோம். அந்த மௌலிதுப் புத்தகம் இது தான் என்று சுப்ஹான மௌலிது கிதாபையும் காண்பித்து அதை ஓதுவதற்காக கூலிக்கு ஆள்பிடித்து, கும்மாளம் அடிக்கிறோம் என்று விலா வாரியாக விளக்கிச் சொல்லியிருந்தால் அந்த ஷெய்க் சுப்ஹான மௌலிது கிதாபைப் படித்துப் பார்த்து விட்டு கிழித்து வீசியிருப்பார்.
இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு யாரைப் புகழ்வது? என்று துபாய் ஷெய்க் சொன்ன வார்த்தைகளை அப்படியே ஒப்புவித்த அந்த எனது உறவினர் அவர்கள், அன்று நாங்கள் அமர்ந்து உரையாடிய அதே ஊரைச் சேர்ந்தவர். சரி இந்த ஊரில் நபி (ஸல்) அவர்கள் எப்படி புகழப்படுகிறார்கள் எனப் பார்ப்போமா?
தஞ்சையை அடுத்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் அது. இவ்வூரில் எனக்குத் தெரிந்து பல வருடங்களாக ரபீவுல் அவ்வல் 12 நாட்களும் பள்ளிவாசலில் மௌலிது ஓதி இரவில் தினமும் தப்ருக் என்ற பெயரில் சாதாரண இனிப்புப் பண்டங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ரபீவுல் ஆகிர் 12 நாட்களும் முஹ்யித்தீன் ஆண்டவர்(?) மௌலிது ஓதி தினமும் இரவில் அனைத்து மக்களுக்கும் கமகமக்கும் நெய்ச்சோறு நிறையவே வழங்கப்படும்.
இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?
ரபீவுல் அவ்வல் மௌலிது விழா வெறும் பாத்திஹாவுடன் சிம்பிளாக முடிந்து விடும். ரபீவுல் ஆகிர் முஹ்யித்தீன் மௌலிது விழா ஊர் முழுக்க தோரணம் கட்டி, பல்லாயிரம் படி சோறாக்கி பள்ளிவாசலில் வைத்து விநியோகித்து, நான்கு கொடி தூக்கி நகர் முழுதும் வலம் வந்து, இந்த ஊர்க்காரர்கள் கொண்டாடுகிற அழகே அழகு?
இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாதுன்னபிக்கு அரசாங்கம் விடுமுறை அளித்ததனால் தான் இவர்கள் ஊரில் உள்ள பள்ளிக் கூடம் விடுமுறை விடப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் மீலாது தினத்தன்று இவர்கள் ஊர் பள்ளிக் கூடம் விடுமுறை விட்டதிi;லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் பிறந்த நாள் அன்று அந்தக் காலத்திலிந்தே பள்ளிக் கூடம் எல்லாம் விடுமுறை நாளாகும்.
இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?
அயல் நாடுகளில் வாழும் இந்த ஊர்க்காரர்கள் பலரும் தங்கள் விடுமுறை காலத்தை கொடிச் சீலை? என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திரு விழாவில் கலந்து கொள்வதற்கேற்ப மாற்றி வைத்துக் கொள்வாhகள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாது நபிக்கு தங்கள் விடுமுறை காலத்தை மாற்றி வைத்து இந்த ஊர்க்காரர்கள் யாரும் அரபு நாடுகளிலிலிருந்து வந்ததாகத் தெரிய வில்லை.
இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?
இதையெல்லாம் படிப்பவர்கள் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களின் மெளிலிதுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் மௌலிதை சிறப்பாக நாம் ஓதச் சொல்வதாகவோ, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாளுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுங்கள் என்று நாம் சொல்வதாகவோ தயவு செய்து நினைத்து விட வேண்டாம். இரண்டையுமே மிகவும் வன்மையாக நாம் கண்டிக்கிறோம். இவை எதுவுமே இஸ்லாத்தில் உள்;ளவை அல்ல என்றும், மிகப் பெரும் பாவங்கள் என்றும் சொல்கிறோம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் காட்டித் தராத அனைத்து விழாக்களும் வழி கேடுகள். அனைத்து வழிகேடுகளும் நரகப் படுகுழிக்கு நம்மை இழுத்துச் செல்லும்.