இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை
புதுதில்லி மாநாட்டுப் பரிந்துரைகள்!
கடந்த 3.10.2009 சனிக்கிழமை புதுடெல்லியில் சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு அமைப்பு (Act Now For Harmony and Democracy) நடத்திய "இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை" எனும் கருத்தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் மன வெளிப்பாடுதான் இக்கட்டுரையின் தலைப்பு.
மூன்று நாள்கள் (3-5 அக்டோபர் 2009) தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், "பல்வகைப்பட்ட அச்சங்களைச் சுமந்து கொண்டு வாழ வேண்டிய இக்கட்டான சூழலில் இந்திய முஸ்லிம் சமுதாயம் சிக்கித் தவிக்கிறது. அவற்றுள் தலையாயதும் கவலைக்கு உரியதுமான அரித்தெடுக்கும் அச்சம் யாதெனில், 'விசாரணை' என்ற பெயரில் எந்த நிமிடத்திலும் 'சட்ட நடவடிக்கை'க்காக நாங்கள் 'தூக்கி'ச் செல்லப் படலாம் என்பதே" என்று ஒரே குரலில் கூறினர்.
தீவிரவாதச் செயல்களைச் செய்ததாகவும் தீவிரவாதச் செயல்களில் தொடர்பு உடையவர்களென்றும் பொய்க் குற்றம் சாட்டப் பட்டு, அநியாயமாகச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களின் உறவினர்கள், தங்களது பாதிப்பு அனுபவங்களை இந்த நடுவுநிலை மாநாட்டுக் குழுவினர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர்.
இந்திய முஸ்லிம்களிடம் நிலவி வரும் அச்சம்-அவநம்பிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மேற்காணும் நடுவுநிலைக் குழுவினர் 12 பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அரசின் முன்னாள் உயரதிகாரியும் குழு உறுப்பினர்களுள் ஒருவருமான திரு. ஹர்ஷ் மந்தர், "காவல் துறை, நீதித் துறைகளினால் முழுமையாகக் கைவிடப் பட்டவர்களாக முஸ்லிம்கள் ஆகிவிட்டனர். ஊடகத் துறையினரும் அரசியல்வாதிகளும் ஏறத்தாழ அதே நிலைபாட்டில்தான் உள்ளனர்" என்று கருத்துத் தெரிவித்தார்.
காவல் துறையினரின் சட்ட விரோதமான, அராஜகப் போக்கைப் பற்றிக் குறிப்பிடும்போது, "தற்போது நிகழ்த்தப்படும் 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' எனும் (குஜராத்பாணி) நடவடிக்கைகள், குஜராத்தில் மட்டுமின்றி இதர பல மாநிலங்களிலும் பரவலாக நடைபெறுவதைக் காணமுடிகிறது. எவ்விதக் குற்றப் பதிவோ தொடர்போ குற்றச் செயல்களுக்கான ஆதாரமோ இல்லாத முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் சீருடையற்ற போலீசார் மூலம் விசாரணை என்ற பெயரில் கடத்திச் செல்லப் பட்டு, காவல் நிலையமல்லாத ஒதுக்குப் புறமான மர்ம இடங்களில் வைத்துக் கொடூரமான முறையில் பல நாள்கள் சித்தரவதை செய்யப் படுகின்றனர்" என்று திரு மந்தர் தம் வேதனையை வெளிப் படுத்தினார்.
இது போன்ற ஒருதலைப் பட்சமான அணுகுமுறைகளினால் முஸ்லிம்களின் உள்ளத்தில் பல்வேறு பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள வேற்றுமையுணர்வின் விளைவுகளை கருத்தில் கொண்டு, இம் மாநாட்டுக் குழு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளது: "நாடு தழுவிய வகையில் தீவிரவாத வழக்குகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் தலைமையில் ஒரு மேல்மட்ட நீதிமன்ற ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். மேலும், சந்தேகத்திற்கிடமான அல்லது புனையப்பட்டதாகக் கருதப் படும் நிகழ்வுகள், விசேஷ விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு அவ்விசாரணை ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாகப் பலர் அவதிப்படும் நிலையை தவிர்க்கலாம்" என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும், "மரண தண்டனை வழங்கப்படத் தக்கக் குற்றங்களின் ஆதாரங்களயும் சாட்சியங்களையும் அழித்த காவல் துறையினர் மீது விசாரணையும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும், 'விசாரணைக் கைது' எனும் பெயரால் பாதிக்கப்பட்டு, நிரபராதிகளாகத் தீர்ப்பளிக்கப் பட்டவர்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்கப் படவேண்டும். காவல்துறை, அரசாங்க சிவில் நிர்வாகத் துறை, நீதித்துறை போன்றவற்றின் எல்லா நிலைகளிலும் அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கிடும் முறையான செயல் திட்டம் அமுலுக்கு வர வேண்டும்" என்றும் மாநாட்டுக் குழுவினரால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
"இக்குழு நடுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட புகார்களில், முஸ்லிமல்லாதோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் வீடு வாடகைக்கு எடுக்கும் விஷயத்தில் காட்டப்படும் வேற்றுமையுணர்வு, காழ்ப்புணர்ச்சி, மேலும் பொதுநல அமைப்புகள் முஸ்லிம்களுக்கெதிராகப் பலவிதத்திலும் காட்டும் பாரபட்சம், அதே அடிப்படையில் பத்திரிகைத் துறையினரின் தவறான-திரிக்கப்பட்ட கருத்துகளை பிரதிபலிக்கும் அணுகுமுறைகள் குறிப்பிடத் தக்கவையாகும்.
பாதுகாப்பு, மேலாண்மை, மற்றும் பாதிக்கப்பட்டோர் புனரமைப்பு அறிக்கை (Prevention, Control and Rehabilitation of Victims Bill) ஆகிய சமூக நல அமைப்புகளின் சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப இந்தியக் குற்றவியல் சாசனப் பிரிவு 153Aயின் அடிப்படையில், வெறுப்புணர்வையும் வேற்றுமையயும் சமூகத்தில் பரப்பிடும் அமைப்புகளுக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்காக மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும்" என்றும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இக்குழுவின் தமது கோரிக்கையில், தற்போதுள்ள SC/ST Act எனும் தாழ்த்தப்பட்ட இனத்தோர்/ தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்களுக்கு எதிரான சமூக ஏற்றத் தாழ்வுக் குற்றங்களுக்கான சட்டத்தைப் போல், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இது போன்ற குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டித்திட சட்டம் வேண்டும் என்றும் மாநாட்டுக் குழு கோரியுள்ளது.
"
பத்து உறுப்பினர் கொண்ட ஒரு செயற்குழுவைப் பிரதமர் நியமித்து தேசிய அளவில் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள இந்த மதவாதத்திற் கெதிரான தீவிரப் பிரச்சாரச் செயல் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பழைய காலத்தில் நடந்த கல்வியறிவுப் பிரச்சாரம், கோயில்கள் நுழைவுப் புரட்சிப் பிரச்சாரத்தினைப் போல் இதுவும் பரவலாக்கப்பட வேண்டும். மேலும் இம்மாநாட்டுக் குழுவின் மூலம் இந்த தேசிய மாநாட்டில் வெளிச்சத்திற்கு வந்த, சமர்ப்பிக்கப் பட்ட, தற்போது சமூகத்தில் தொடர்ந்து நிலவிவரும் இது போன்ற சமூக அவலங்களினையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டி ஆவணப்படுத்த வேண்டும்" என்றும் பரிந்துரையில் கூறப்பட்டது.
இக்குழு மேலும் தனது பரிந்துரையின் மூலம், "இது போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட, அநீதியிழைக்கப்பட்ட கணிசமான மக்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்க சிறுபான்மை நலத்திட்டம், பழங்குடியினர் நலத் திட்டம் போன்ற அந்தந்தச் சமுதாய எண்ணிக்கை விகிதாச்சாரப்படியான விசேஷ திட்டங்களின் அடிப்படையில் திட்டம் அமைக்கக் கோரியுள்ளது. மேலும் பத்துப்பேர் அடங்கும் செயற்குழுவுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் மூலம், வஃக்பு வாரியச் சொத்துக்களின் பராமாரிப்பு மூலம் வரும் வருமானங்கள் சீராகவும் முறையாகவும் ஒருமுகப்படுத்திடும் முதலீடுகள் மூலம் அதிகமான வளங்களுக்கு வழி வகுக்க, உறுதி கொடுக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டது.
"இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை" என்பதைச் சுட்டிக்காட்டிய, இக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மஹேஷ் பட் எனும் சினிமா தயாரிப்பாளர், "இது போன்ற பாரபட்சமான மனப்பான்மைக் கெதிரான ( anti-discrimination law ) சட்டம் இயற்றப்பட வேண்டியது உடனடியான தேவையாகும்" என்று கூறினார்.
மூலம் : தி ஹிண்டு
தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்
நன்றி : சத்தியமார்க்கம்.காம்
photos courtesy: outlook Mazazine